×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நிறைவு பழுதடைந்த 118 இயந்திரங்கள் அனுப்பும் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு

ஆற்காடு : ஆற்காட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணிகள் நேற்று நிறைவு பெற்றதைத் தொடர்ந்து பழுதடைந்த இயந்திரங்கள் அனுப்பும் பணியை கலெக்டர் வளர்மதி நேரில் ஆய்வு செய்தார்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்கில் வரும் 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் முதல்நிலை சரி பார்க்கும் பணிகள் கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1122 வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2506, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 1626, யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரி பார்க்கும் விவி பேட் 1683 ஆகியவை பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது.

தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணிகள் நடைபெற்றது.
இந்த மையத்தில் 24 மணி நேரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற முதல் நிலை சரி பார்க்கும் பணியில் பெல் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

மேலும் வருவாய் துறையைச் சேர்ந்த உதவியாளர்கள் வட்டங்கள் வாரியாக சுழற்சி முறையில் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணிகள் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் முதல் நிலை சரிபார்க்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து அதில் பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்டறியப்பட்டு அவை பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பும் பணி நேற்று நடந்தது.

அதனை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கு நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் உடைத்து திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரி பார்க்கும் விவி பேட் 52, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 43, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 23 என மொத்தம் 118 இயந்திரங்கள் பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு வேனில் பாதுகாப்பாக அனுப்பும் பணி நடைபெற்றது.

இந்த பணிகளை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் கிடங்கு மீண்டும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, தேர்தல் வட்டாட்சியர் ஜெயக்குமார், தாசில்தார் வசந்தி மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நிறைவு பழுதடைந்த 118 இயந்திரங்கள் அனுப்பும் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Artgad ,Arcot ,
× RELATED ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில்...